ஜன. 21 இல் மண்டபம் மீன்வளத்துறை அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம்: மீனவ சங்கம் அறிவிப்பு

இலங்கை கடற்படையினர் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவத்துக்கு காரணமான இரட்டைமடி வலைகளை

இலங்கை கடற்படையினர் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவத்துக்கு காரணமான இரட்டைமடி வலைகளை பயன்படுத்த அனுமதி அளித்த மண்டபம் மீன்வளத்துறையை கண்டித்து ஜனவரி 21 ஆம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த போவதாக மீனவச் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு புதுச்சேரி விசைப்படகு மீனவச் 
சங்கப் பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ்  வியாழக்கிழமை கூறியது: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம் பகுதியில் தான் அதிகளவில் விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், கடல் வளத்தை அழிக்கும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்த  தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வது கிடையாது. மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் விசைப்படகு உரிமையாளர்களுடன் அதிகாரிகள் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். 
மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதன் பின்னர் ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இவற்றை சர்வசாதரணமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை இலங்கை கடற்படையினர் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவம் நடைபெற்றது. எனவே இரட்டை மடி வலைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 21 ஆம் தேதி மண்டபம் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com