திருவாடானை அருகே 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

திருவாடானை அருகே உள்ள திருத்தேர்வளையில் திறந்தவெளியில் கிடக்கும் கற்குவியலில் கி.பி.14 ஆம் நூற்றாண்டைச்

திருவாடானை அருகே உள்ள திருத்தேர்வளையில் திறந்தவெளியில் கிடக்கும் கற்குவியலில் கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருத்தேர்வளையில் சேதமடைந்த நிலையில் இருந்த பழைமையான சிவன் கோயிலை முழுவதுமாக அகற்றிவிட்டு புதிதாகக் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அகற்றப்பட்ட கோயில் கற்கள், தூண்கள் கோயிலின் சுற்றுப்புறத்தில் போடப்பட்டுள்ளன. இதில் கல்வெட்டுகள் எதுவும் உள்ளதா என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கோயிலின் தெற்குப் பகுதியில் கிடந்த கற்குவியலில் இருந்து பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த ஒரு துண்டுக் கல்வெட்டை அவர்கள் கண்டெடுத்து படி எடுத்தனர்.
இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு வெள்ளிக்கிழமை கூறியதாவது: கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள பழைய கோயில் விமானத்தின் அதிஷ்டானப் பகுதியின் முப்பட்டைக் குமுதத்தில் இக்கல்வெட்டு இருந்துள்ளது. இதில் மன்னர் பெயர் இல்லை. அவரின் 13ஆவது ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வூர் திருக்கானபேர்க்கூற்றம் (காளையார்கோவில்) எனும் நாட்டுப்பிரிவில் இருந்துள்ளது. இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கப்பட்ட தகவலைச் சொல்லும் கல்வெட்டாக இது உள்ளது.
இவ்வூர் அருகில் உள்ள ஆனந்தூர் சிவன்கோயிலில் கி.பி.1323 ஆம் ஆண்டைச் சேர்ந்த சடையவர்மன் பராக்கிரமபாண்டியன் கல்வெட்டு உள்ளது. அதே எழுத்தமைவில் இக்கல்வெட்டும் உள்ளது. எனவே இதுவும் கி.பி.14 ஆம் நூற்றாண்டு பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது எனலாம். மேலும் ஆனந்தூர் கல்வெட்டில் திருத்தேர்வளையைச் சேர்ந்த வணக்குச் செட்டியார் என்பவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய கோயில்கள் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அதன் கல்வெட்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். 
திறந்தவெளியில் கிடக்கும் இத்தகைய வரலாற்றுச் சாசனங்களை அரசும், மக்களும் பாதுகாக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com