பாம்பன் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
By DIN | Published On : 01st July 2019 02:13 AM | Last Updated : 01st July 2019 02:13 AM | அ+அ அ- |

பாம்பன் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றதை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்றனர்.
பாம்பன் மீனவர்களுக்கு மீன்வளத் துறை மூலம் வழங்கப்படும் மானிய டீசலை முறையாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மீனவர்கள் கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பாம்பன் பகுதியில் உள்ள 112 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டன.
தொடர்ந்து 3 நாள்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்பு தொழிலாளர்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். கடந்த சனிக்கிழமை, பாம்பன் விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மீன்வளத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், மீனவர்களுக்கான மானிய டீசல் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து, ஞாயிற்றுகிழமை போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள், அன்றே கடலுக்குச் சென்றனர்.