சுடச்சுட

  

  ராமநாதபுரம் கண்மாய்களில் குடிமராமத்து பணி: இன்று விவசாயிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

  By DIN  |   Published on : 02nd July 2019 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறுகிறது. 
   இது குறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
   ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்வள ஆதாரங்களை பேணி பாதுகாக்கவும், நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்கவும், மழை நீரை விரயமின்றி சேமித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு, முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் (2019-2020) கீழ் 69 பொதுப்பணித்துறை கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளின் பங்களிப்போடு புனரமைக்கப்பட உள்ளன. 
      கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், மடைகளை பழுதுபார்த்தல் மற்றும் மறுகட்டுமானம், கலுங்குகளை பழுதுபார்த்தல் மற்றும் மறுகட்டுமானம், வரத்துக்கால்வாய்களை தூர்வாருதல் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள ரூ.37.59 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 17974.86 ஹெக்டேர் விளை நிலங்கள் பயன்பெறும்.
    கீழ் வைகை வடிநிலக் கோட்டம் (பரமக்குடி) கட்டுப்பாட்டில் பரமக்குடி, ராமநாதபுரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் முதுகுளத்தூர் வட்டங்களில் உள்ள 41 கண்மாய்களை சீரமைக்க ரூ.23.62 கோடியும், குண்டாறு வடிநில கோட்டம் (மதுரை) கட்டுப்பாட்டில் முதுகுளத்தூர், கடலாடி மற்றும் கமுதி வட்டங்களில் உள்ள 28 கண்மாய்களை சீரமைக்க ரூ.13.97 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  
    குடிமராமத்து பணிகளுக்கு அரசின் பங்களிப்பாக 90 சதவீத தொகையும், அப்பகுதி விவசாய குழுக்களின் பங்களிப்பாக 10 சதவீத தொகையும் இடம்பெறும்.
      திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறும் வகையில் விழிப்புணர்வு சிறப்பு கூட்டம் செவ்வாய்கிழமை (ஜூலை 2)  பிற்பகல் 3 மணிக்கு,  ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெறுகிறது. ஆகவே விவசாயகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai