சுடச்சுட

  

  வேலை, நிலம் வாங்கித் தருவதாக மோசடி: பரமக்குடியைச் சேர்ந்த இருவர் மீது புகார்

  By DIN  |   Published on : 02nd July 2019 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமக்குடியில் அரசு வேலை மற்றும் சலுகை விலையில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய், நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக இருவர் மீது ஏராளமானோர் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். 
   ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பரமக்குடி சுந்தர்நகர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மனு அளிக்க வந்தனர்.  அவர்களில் பூர்ணாச்சாரியார் கூறியதாவது: 
   எனது மகன் பாலாஜிகுமாருக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன், லட்சுமணன் ஆகியோர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 8 லட்சம் மற்றும் 16 பவுன் நகைகளை வாங்கினர்.  ஆனால், வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை பல முறை கேட்டு அலைந்த நிலையில், தற்போது வரதராஜன் தலைமறைவாகிவிட்டார் என்றார்.
   சுந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள் எனும் மூதாட்டி வரதராஜன், லெட்சுமணனிடம் நிலம் வாங்கித்தருவதாகக் கூறியதால் ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகைகளையும் கொடுத்துள்ளார். 
   அதேபோல சேகர் மனைவி சுமதி, ரூ.15 லட்சத்தையும், ராஜாராம் மனைவி மீரா ரூ.1.50 லட்சம் மற்றும் அரை பவுன் நகைகளையும் வரதராஜன் தரப்பினரிடம் கொடுத்துள்ளார். பணம், நகைகளை பலரிடமும் வாங்கிக் கொண்ட வரதராஜன், லட்சுமணன் ஆகியோர் யாருக்கும் வேலை மற்றும் நிலம் வாங்கித்தரவில்லை. இதுதொடர்பாக காவல்துறையை அணுகியபோது அலைகழிக்கப்படுவதாக மனு கொடுத்தவர்கள் கூறினர்.
   மனுவுடன், வரதராஜன் தரப்பினரிடம் கொடுத்த பணம், நகைக்கான ஒப்பந்தப் பந்திரங்களையும் சம்பந்தப்பட்டோர் கொண்டு வந்திருந்தனர். பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், மனுவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 
   பரமக்குடியில் ஏற்கெனவே நகைக்கடை அதிபர் ஏராளமானோரிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் தலைமறைவானதாக புகார் எழுந்துள்ள நிலையில், தற்போது வேலை மற்றும் சலுகை விலையில் நிலம் வாங்கித்தருவதாக பல லட்சம் பணம், நகைகளை வாங்கி இருவர் மோசடி செய்து தலைமறைவானதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai