ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1,200 சத்துணவு பணியாளர்கள் பற்றாக்குறை: மாணவர்களுக்கு மதிய உணவு கிடைப்பதில் சிக்கல்
By DIN | Published On : 05th July 2019 09:31 AM | Last Updated : 05th July 2019 09:31 AM | அ+அ அ- |

அரசுப் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் அமைப்பாளர், உதவியாளர், சமையலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களுக்கு மதிய உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 300 அரசுப் பள்ளிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 2,800 க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் உள்ளன. இங்கு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 4,250-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில் கமுதி தாலுகாவில் உள்ள சத்துணவு மையங்களில் 104 சமையலர், 60-க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், 63-க்கும் மேற்பட்ட சமையல் உதவியாளர் பணியிடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 1,200 சத்துணவு பணியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப 2017இல், விண்ணப்பங்கள் பெறப்பட்டு, இதுவரையில் பணி நியமனம் இல்லாததால், காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர்கள் பல மையங்களை கூடுதலாக பொறுப்பேற்றும், சமையலர்கள், உதவியாளர்கள் ஒவ்வொருவரும் 2 அல்லது 3 க்கும் மேற்பட்ட மையங்கள், இணை மையங்களை கூடுதலாகவும் கவனித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் இவ்வாறு கூடுதலாக பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஒரு மையத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவு சமைத்து அருகில் உள்ள இணை மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நகர் புறங்களில் பணியாற்றும் பணியாளர்கள் ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் போக்குவரத்து இல்லாத குக்கிராமங்களில் பணியாற்றும் சத்துணவு பணியாளர்கள் பெண்களாக இருப்பதால் காட்டுப்பாதைகளில் தனியாக உணவை எடுத்துச்செல்ல அச்சப்படுகின்றனர். கமுதி பகுதியில் பெண் பணியாளர்களிடம் இதுவரை 8 க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பங்கள் நடந்துள்ளன.
இதனால் கிராமங்களில் பணியாற்றும் பல பெண் பணியாளர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் நகர் புறங்களுக்கு இடமாறுதல் பெற்றுச் செல்கின்றனர். இந்த காலியாக உள்ள பணியிடத்தை கவனிக்க அருகில் உள்ள மையங்களில் உள்ள சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் அரசுப் பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும், வரும் காலங்களில் பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கடந்த 2017இல் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியானவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சிதுறை அலுவலர்கள் கூறியதாவது: மாவட்ட நிர்வாகத்திடம் சத்துணவு பணியாளர் பற்றாக்குறை பற்றி பல முறை தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் வரை இது போன்ற சிக்கல்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கும். காலிப் பணியிடங்களை நிரப்புவது மாவட்ட நிர்வாகத்தின் கையில் உள்ளது என்றனர்.