சுடச்சுட

  

  ராமநாதபுரத்தில் குழந்தைகளிடம் அதிகரிக்கும் பல் நோய் பாதிப்பு! முறையான சிகிச்சையின்மையால் இதய நோயாக மாறும் அவலம்

  By DIN  |   Published on : 10th July 2019 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 வயது முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளிடம் பல் நோய் பாதிப்பு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அதற்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவர்களுக்கு இதயநோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
  தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பள்ளிச் சிறார்களுக்கான மருத்துவக் குழு பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி முதல் பிளஸ் 2 வரை படிப்போர் வரை இந்த திட்டத்தில் பயன் பெறுகின்றனர். ராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தை சுகாதார மாவட்டம் என்ற அளவில் ராமநாதபுரம், பரமக்குடி என 2 பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். இதில்  ராமநாதபுரம் பிரிவில் 5 வட்டாரங்களும், பரமக்குடியில் 6 வட்டாரங்களும் உள்ளன.  
  தமிழக அரசின் மருத்துவக்குழு பரிசோதனைத் திட்டத்தை செயல்படுத்த  ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தலா 2 மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதில் எம்பிபிஎஸ் படித்த மருத்துவ அலுவலர், மருந்தாளுநர், செவிலியர் அல்லது சுகாதார செவிலியர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு ஒரு முறையும், அங்கன்வாடி மையங்களில் இரு முறையும் பரிசோதனை நடத்தி வருகின்றனர். இத்திட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் 1,760 பள்ளிகளைச் சேர்ந்த 1.59 லட்சம் குழந்தைகளும், 1,455 அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த 5 வயதுக்கு உள்பட்ட 60,852 குழந்தைகளும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் ராமநாதபுரம் சுகாதாரப் பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் 75,286 பேரும், பரமக்குடியில் 83,924 பேரும் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அங்கன்வாடிகளில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் ராமநாதபுரம் பிரிவில் 692 மையங்களில் 28,600 குழந்தைகளும், பரமக்குடியில் 763 மையங்களில் 32, 252 குழந்தைகளும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். இதில் சத்துக்குறைவால் 345 குழந்தைகளும், தோல் பாதிப்புக்கு 2,733 பேரும், சுவாசத் தொற்று நோய்க்கு 2,024 பேரும் மற்றும் பல் சொத்தை பாதிப்பு போன்றவற்றுக்கு 6,417 குழந்தைகளும் ஆளாகியிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. காலை உணவு கூட கொடுக்காமல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால் சத்துக்குறை பாடு ஏற்படுகிறது.  
  இப்பாதிப்புக்கு 3 வயது முதல் 10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளே அதிகம் உள்ளாகியுள்ளனர். இனிப்புகளை அதிகம் உண்ணும் குழந்தைகள் சரியாக பல் துலக்காத காரணத்தால் கடைவாய்ப் பற்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, அதனால் பல் நோய் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. 
  குழந்தைகளுக்கு ஏற்பட்ட பல் நோய்க்கு பெற்றோர் முறையான சிகிச்சை அளிக்காத நிலையில், குழந்தைகளுக்கு தொண்டை வலி பாதிப்பும், இதனைத்தொடர்ந்து பாக்டீரியாக்களால் இருதயத் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும்  கண்டறியப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இருதய பாதிப்புக்கு 260 குழந்தைகள் உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு சிறப்புத் திட்டத்தில் இலவசமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 
  மேலும், கடந்த 4 ஆண்டுகளில் காது கேளாமை 18, கால் வளைந்த பாதிப்பு 23,  பார்வை குறைபாடு 19 அன்னப் பிளவு 48 என பாதிப்பு கண்டறியப்பட்ட  குழந்தைகளுக்கு சிகிச்சை மூலம் சீராக்கப்பட்டுள்ளன.
  ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்கள் சுகாதாரத்தில் போதிய கவனம் செலுத்தாத காரணத்தாலேயே குழந்தைகளுக்கு கடைவாய்ப் பல் பாதிப்பு நோய் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார் சிறப்புத் திட்டத்தில் பயிற்சி அளிக்கும் மருத்துவர் ஆர்த்தி. 
  அவர் மேலும் கூறியது: பாதிப்பை உரிய நேரத்தில் கவனித்து சிகிச்சை அளிக்காத நிலையிலே தொண்டை வலி நோயைத் தொடர்ந்து இருதய தொற்று நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்கிறார். 
  ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரத் திட்டத்தில் போதிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், அதனடிப்படையில் குழந்தைகள் நலனுக்கான உடல்நலப் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பி. குமரகுருபன் கூறினார்.
  அரசு சார்பில் ஒரு புறம் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தினாலும், பெற்றோர் போதிய விழிப்புணர்வோடு செயல்பட்டாலே குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும் என்பதால் தாய்மார்கள் விழிப்போடு இருப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai