ராமநாதபுரத்தில் வாகனச் சோதனையில் போலீஸார் தாக்கியதில் பெண்ணின் தலையில் காயம்
By DIN | Published On : 15th July 2019 07:32 AM | Last Updated : 15th July 2019 07:32 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையின்போது, இரு சக்கர வாகனத்தை நிறுத்தக் கூறி போலீஸார் தாக்கியதில் பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டது.
ராமநாதபுரம் அருகே முதலூர் அடுத்துள்ள துரத்தியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண் மாரிக்கண்ணு (40). இவர் தனது கணவர் வெள்ளுர் மற்றும் உறவினர் கண்ணன் ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரத்துக்கு உறவினரின் ஈமச் சடங்குக்கான பொருள்களை வாங்க வந்துள்ளனர். அதையடுத்து, துரத்தியனேந்தல் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இடையன்வலசை அடுத்துள்ள ஈ.சி.ஆர். சாலையில் சார்பு-ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வந்ததால், வாகனத்தை நிறுத்துமாறு கூறிய போலீஸார், பின்னால் அமர்ந்திருந்த மாரிக்கண்ணுவின் தலையில் லத்தியால் தாக்கியுள்ளனர். இதில், மாரிக்கண்ணுவின் மண்டை உடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே, போலீஸார் அவரை ஆட்டோவில் ஏற்றி, பாரதி நகர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து மாரிக்கண்ணுவிடம் விசாரித்தபோது, அவர் கூறியது: எனக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். எனக்கு ஏதாவது ஆகியிருந்தால், எனது மகள்களை யார் கரையேற்றுவார்கள் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஏற்கெனவே, வாகனச் சோதனையின்போது போலீஸார் அத்துமீறுவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்துள்ள நிலையில், ராமநாதபுரத்தில் போலீஸார் பெண்ணின் மண்டையை உடைத்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.