தமிழகம் முழுவதும் சீபோடாக்ஸைம் மருந்துகளை திருப்பி அனுப்ப உத்தரவு

ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய  சீபோடாக்ஸைம் ஊசி மருந்துகளை, மாநிலம்


ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய  சீபோடாக்ஸைம் ஊசி மருந்துகளை, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இருந்து  திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18) மாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு எதிர்ப்புசக்தி மருந்தான (ஆண்டிபயாடிக்)  சீபோடாக்ஸைம் ஊசி போடப்பட்டது. 
இந்த மருந்து செலுத்தப்பட்ட 52 பேரில் 30 பேருக்கு சளி, காய்ச்சல், உடல் நடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து மாற்று மருந்துகள் வழங்கப்பட்ட பிறகு, நோயாளிகள் பாதிப்பிலிருந்து மீண்டனர். இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். 
நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய ஊசி மருந்தை பயன்படுத்தக்கூடாது எனவும், அந்த மருந்தை பரிசோதனைக்கு உள்படுத்தவும் உத்தரவிட்டார். 
ராமநாதபுரம் அரசு  மருத்துவமனையில்  சீபோடாக்ஸைம் மருந்து     மொத்தம் 20 ஆயிரம் வில்லைகளாகப் பெறப்பட்டிருந்தன. இதுவரை அதில் 400 வில்லைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய மருந்து வில்லைகளை சென்னை மருத்துவக் குடோனுக்கு அனுப்ப மருத்துவத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சகாய ஸ்டீபன்ராஜ் கூறியது: ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ள சீபோடாக்ஸைம் ஊசி மருந்து தமிழக அரசால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. 
மேலும், தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனைகளில்  அந்த ஊசி மருந்துகளை நோயாளிகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மருந்துகளை மருந்துக் குடோனுக்கு அனுப்பவும் சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர் என்றார். 
மக்களவை உறுப்பினர் விசாரிப்பு: ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஊசி மருந்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சனிக்கிழமை காலை, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் கே.நவாஸ்கனி நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும், கண்காணிப்பாளர் கே.ஜவஹர்லால், நிலைய மருத்துவ அலுவலர் கருப்பசாமி ஆகியோரிடம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் குறித்து கேட்டறிந்தார். 
அப்போது அரசு மருத்துவமனையில் இருந்த குப்பைக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான வசதி, கழிவு நீரை சீரமைக்கும் வாகனம், நோயாளிகளுக்கான கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com