கமுதி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் வாபஸ்
By DIN | Published On : 24th July 2019 07:09 AM | Last Updated : 24th July 2019 07:09 AM | அ+அ அ- |

கமுதி பேரூராட்சி 15 ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பேரூராட்சியை முற்றுகையிடுவதாக அறிவித்த போராட்டம், அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டது.
கமுதியில் பேரூராட்சி 15 ஆவது வார்டில் கழிவுநீர் கால்வாய், கழிப்பறைகள், மின்சாரம், குடிநீர், குப்பை தொட்டி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி பேரூராட்சியை புதன்கிழமை பொதுமக்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதுதொடர்பாக நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனையடுத்து கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் ரா.இளவரசி தலைமையில் காவல் சார்பு ஆய்வாளர் முருகநாதன் முன்னிலையில் சமாதானக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 15 ஆவது வார்டு முக்கிய பிரமுகர்கள், தமிழ்புலிகள் தென் மன்டல துணை செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் புதன்கிழமை நடைபெற இருந்த முற்றுகை போராட்டத்தைக் கைவிடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.