ராமநாதபுரத்தில் நில விற்பனை மோசடி புகார்: 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு
By DIN | Published On : 24th July 2019 07:10 AM | Last Updated : 24th July 2019 07:10 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் நிலம் விற்பனை மோசடியில் ஈடுபட்டதாக நீதிமன்ற உத்தரவின் பேரில் 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவாடானையைச் சேர்ந்த செல்வராணி என்ற ஷகிலாபானுவுக்குச் சொந்தமான 85 சென்ட் நிலம் ராமநாதபுரத்தில் உள்ளது. இந்த இடத்தை வாங்குவதற்காக ராமநாதபுரம் ஈஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (57) என்பவர் ரூ.1.40 கோடிக்கு விலை பேசியுள்ளார். இதற்கு முன்பணமாக 2012 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 5 தவணையாக ரூ.25 லட்சம் முன் பணம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அதே நிலத்தில் 25 சென்ட் நிலத்தை செல்வராணி சம்மதத்தின் பேரில் சிலர் வேறு சிலருக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் முன்தொகை வாங்கிய நிலத்தை வேறு நபர்களுக்கு விற்று மோசடி நடந்துள்ளதாக ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1 இல் செல்வராஜ் வழக்குத் தொடர்ந்தார்.
இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் திருவாடானையைச் சேர்ந்த செல்வராணி என்ற ஷகிலாபானு மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.