Enable Javscript for better performance
குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தும் 3 கிராமங்களுக்கு பரிசு: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தும் 3 கிராமங்களுக்கு பரிசு: ஆட்சியர்

    By DIN  |   Published on : 25th July 2019 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தும் 3 கிராமங்களுக்கு சிறப்புப் பரிசுகள்  வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கூறினார். 
    தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட எக்ககுடி கிராம கண்மாய் ரூ.49 லட்சத்தில் சீரமைக்கப்படுகிறது. அப்பணியை செவ்வாய்க்கிழமை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பரமக்குடி கீழ் வைகை வடிநிலக் கோட்டத்தில் 41 கண்மாய்களிலும், மதுரை குண்டாறு வடிநிலக் கோட்டத்தில் 28 கண்மாய்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
    கண்மாய்களின் கரைகளை பலப்படுத்துதல், நீர்ப்பிடிப்பு பகுதிகளை தூர்வாருதல், நீர் வரத்துக் கால்வாய்களை சீரமைத்தல், மடைகள் மற்றும் கலுங்குகளை தேவைக்கேற்ப சீரமைத்தல், புதிதாக கட்டுதல் மற்றும் கரைகளில் மரங்களை நடுதல், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
    குடிமராமத்து பணியினை சிறப்பாக செயல்படுத்தும் ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தினை ஊக்கப்படுத்தும் வகையில் 3 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2 ஆம் மற்றும் 3 ஆம் பரிசாக தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படவுள்ளது என்றார். 
    ஆய்வின்போது, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவிப் பொறியாளர்கள் பி.ராஜேந்திரன், பி.ஆனந்த் பாபுஜி  உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai