Enable Javscript for better performance
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் 200 ஊருணிகளைத் தூர்வார நடவடிக்கை: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் 200 ஊருணிகளைத் தூர்வார நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 25th July 2019 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.2 கோடி செலவில் 200 ஊருணிகள் தூர்வாரப்படவுள்ளதாக ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார். 
    ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கிராமத்தில் புதன்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. அதனை  மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், தொடங்கிவைத்தார். 
    அப்போது அவர் பேசியதாவது:     மாவட்டத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன.  ஆற்றங்கரை மக்கள் வழங்கிய 18 கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், ரூ.35 லட்சத்தில் சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் 8,300 ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.  
    பயிர் காப்பீடு திட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.528 கோடியும்,   2017-18 ஆம் ஆண்டில் ரூ.477 கோடியும்  வழங்கப்பட்டுள்ளன.  
    அதேபோல, 2018-2019 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  கடந்த 3 ஆண்டுகளாக 827 மில்லி மீட்டர் பெய்யவேண்டிய மழை பெய்யவில்லை.  இப்பாதிப்பை கவனத்தில் கொண்டு மாற்றுப்பயிர்கள், மழை நீர் சேகரிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 
    மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பில் முன்னோடியாக செயல்பட்டு  நீர்நிலைகள் தூர் வாரப்பட்டுவருகின்றன.  நடப்பு 2019-ம் ஆண்டில் 69 கண்மாய்கள் ரூ.37.59 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் நிலையில், மேலும், 1112 ஊராட்சி ஒன்றியக் கண்மாய்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊருணிகளை தூர் வாரி, கரைகளை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
    பிரதமர் அறிவித்த சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டமாக ராமநாதபுரம் இருப்பதால் தனியார் துறைகளின் நிதிகள் மூலமாகவும் மழைநீர் சேகரிப்பு மேம்படுத்தப்படவுள்ளன. 
    அதன்படி நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக சுமார் ரூ.2 கோடியில் 200 ஊருணிகள் தூர் வாரப்படவுள்ளன. மேலும், தலா ரூ.1 லட்சம் முழு மானியத்தில் 2575 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றார். 
    நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai