முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ஆடி அமாவாசை சிறப்பு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
By DIN | Published On : 30th July 2019 08:59 AM | Last Updated : 30th July 2019 08:59 AM | அ+அ அ- |

ஆடி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடற்கரையோரத்தில் பூஜை செய்யவருவோரிடம் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க நிர்வாகி கண்ணன் சிவா உள்ளிட்டோர் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியது:
ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தேவிபட்டணம், சேதுக்கரை ஆகிய இடங்களில் கடலில் மக்கள் புனித நீராடி பூஜை செய்வது வழக்கமாகும். புதன்கிழமை ஆடி அமாவாசை என்பதால் ஆயிரக்கணக்கானோர் ராமநாதபுரம் வருவர். ஆகவே ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவர்களுக்கு சிறப்புப் பேருந்து எனும் பெயரில் கூடுதல் பயணக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சேதுகரைக்கு வரும் பக்தர்களிடம் திருப்புல்லாணி புதுக்குடியிருப்புப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் அமைத்து சிலர் போலி ரசிது மூலம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் நடந்துவருகிறது. ஆகவே நடப்பு ஆண்டில் அதை தடுத்து நிறுத்தி பூஜைக்கு வருவோருக்கு வாகன நிறுத்துமிட கட்டணத்தை நியாயமாக நிர்ணயித்து வசூலிக்கவேண்டும்.
ராமேசுவரம், தேவிபட்டணம், சேதுக்கரை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்துதரப்படவேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்துள்ளோம். அதை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றனர்.