முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
கப்பல்படை, கடலோர காவல்படை மாலுமி பணியில் சேர மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி
By DIN | Published On : 30th July 2019 09:03 AM | Last Updated : 30th July 2019 09:03 AM | அ+அ அ- |

கப்பல் படை மற்றும் கடலோரக் காவல் படையின் மாலுமி பணியில் சேருவதற்கான வழிகாட்டுதல் பயிற்சியில் மீனவ இளைஞர்கள் சேரலாம்.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்திய கப்பற்படை மற்றும் கடலோர காவல்படையின் மாலுமி பணிகளில் சேருவதற்கான வழிகாட்டு சிறப்பு பயிற்சி அரசால் அளிக்கப்பட உள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்த மீனவ இளைஞர்கள் இந்தியக் கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல்படையில், மாலுமி பணிகளுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சியடைந்து வேலை வாய்ப்பினை பெறலாம். அதற்காக 3 மாத கால சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், தங்கும் வசதி மற்றும் உணவு வசதியும் அரசு மூலம் வழங்கப்படவுள்ளது. பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மண்டபம், மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தினை வாங்கி பூர்த்தி செய்து மண்டபம் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அளித்திடலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.