முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
கீழக்கரையில் 2 மதுபானக்கடைகளை அகற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 30th July 2019 09:01 AM | Last Updated : 30th July 2019 09:01 AM | அ+அ அ- |

கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இரண்டு அரசு மதுபானக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கீழக்கரையைச் சேர்ந்த இஸ்லாமிய கல்விச் சங்கம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், வடக்குத் தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை, கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை, போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கழகம், மக்கள் நலப் பாதுகாப்புக் கழகம், மஜ்ம உல் ஹராத்தியா தர்ம அறக்கட்டளை, எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், வீரகுல தமிழர் படை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மனு விவரம்: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் இரு மதுபானக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. அங்கு மது அருந்த வருவோரால் பெண்கள் தெருவில் நிம்மதியாக நடமாட முடியவில்லை. அப்பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மாணவியர் அச்சத்துடன் செல்கின்றனர்.
பேருந்து நிலையம், மருத்துவமனை, குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மதுக்கடைகளை திறந்திருப்பதால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவருகிறது. ஆகவே கடைகளை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களாக கீழக்கரையில் மதுக் கடைகளை அகற்றக் கோரி மக்கள் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என்றும் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தவர்கள் வேதனை தெரிவித்தனர்.