முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் இலங்கை சிறையில் அடைப்பு
By DIN | Published On : 30th July 2019 09:02 AM | Last Updated : 30th July 2019 09:02 AM | அ+அ அ- |

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரும் திங்கள்கிழமை அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் துரைசிங்கம் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்து ஜோசப் பால்ராஜ், பெனிட்டோ, நாகராஜ், இன்னாசி, சுப்பிரமணி, முனியசாமி, சத்தியசீலன் ஆகிய 7 மீனவர்களை சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
மீனவர்களின் விசைப்படகை பறிமுதல் செய்த நீரியல் துறையினர், மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்து தலைமன்னர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர். 7 பேரையும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, 7 பேரும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் விசைப்படகை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.