இறால் பண்ணைகளால் உப்பு நீராக மாறிய ஊருணிகள்: புதுக்காடு கிராம பெண்கள் புகார்
By DIN | Published On : 30th July 2019 09:00 AM | Last Updated : 30th July 2019 09:00 AM | அ+அ அ- |

இறால் பண்ணைகளால் ஊருணிகள் உப்பு நீராக மாறியதால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலிக்குடங்களுடன் வந்திருந்தனர்.
திருவாடானை வட்டம் ஏ.மணக்குடி ஊராட்சிக்குள்பட்ட புதுக்காடு கிராம பொதுமக்கள் மற்றும் மகளிர் மன்றத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து அமர்ந்தனர்.
அப்பெண்கள் கூறியதாவது: புதுக்காடு பகுதியில் 53-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 350-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊரில் ஊருணிகள் இருந்தும் இறால் பண்ணைகளால் அவை உப்புத்தன்மையுள்ள மண்ணாகி விட்டது.
இதனால், அதில் தேங்கும் நீரை பயன்படுத்தமுடியவில்லை. ஊரைச்சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரில் ஆழ்துளைக் கிணறுகள், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்பு எதுவும் இல்லை.
இதனால், தண்ணீரை விலைக்கு வாங்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு தினமும் ரூ.100 கொடுத்தே தண்ணீரை வாங்கி பயன்படுத்தவேண்டியுள்ளது. குடிநீர் மட்டுமின்றி பேருந்து வசதியும் இல்லை.
புதுக்காடு பேருந்து நிலையத்திலிருந்துதான் கண்ணாரேந்தல், காங்காடு உள்ளிட்ட 4 கிராம பொதுமக்களும் வேறு ஊர்களுக்குச் சென்று வரவேண்டியுள்ளது.
ஆனால், போதிய பேருந்து வசதி இல்லாததால் அவதியுறுகிறோம் என்றனர்.
அவர்கள் ஆட்சியர் கொ.வீரராகவராவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார்.