தமிழக அரசு மீது முகநூலில் அவதூறு: வாழ்வுரிமை கட்சி நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்
By DIN | Published On : 01st June 2019 07:42 AM | Last Updated : 01st June 2019 07:42 AM | அ+அ அ- |

தமிழக அரசு மீது முகநூலில் அவதூறு பரப்பியதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலர் மீது வழக்குப் பதியப்பட்டதை அடுத்து, அவர் வியாழக்கிழமை திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரம் மகன் ஆறுமுகம் என்பவர் புகார் மனு அளித்திருந்தார். அதில், ஓரிக்கோட்டை பாரதி நகரைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலராக உள்ளார். இவர், கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தமிழக அரசு மீது அவதூறு பரப்பும் விதமாக பதிவிட்டுள்ளார் என்றும், அவர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்பேரில், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து, முருகானந்தத்தை தேடிவந்தனர். இந்நிலையில், அவர் முன்ஜாமீன் பெற்று, அதன்படி திருவாடானை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகி ஜாமீனில் வந்தார்.