திருவாடானை அருகே வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை: அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை
By DIN | Published On : 09th June 2019 02:46 AM | Last Updated : 09th June 2019 02:46 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகளிடம் அதிகாரிகள் சனிக்கிழமை சமரசப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
திருவாடானை அருகே உள்ள நகரிகாத்தான் கிராமத்தில் எட்டுகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதில், அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.
தற்போது 2017-18 ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகை மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் சிலருக்கு பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என எட்டுகுடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
தகவலறிந்த கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கருப்பையா, செயலர் மணிமுத்து, சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டி காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விவசாயிகளுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில், இழப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு முழுமையாக தொகைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.