சந்தான விநாயகர், நாகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 14th June 2019 07:47 AM | Last Updated : 14th June 2019 07:47 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டணத்தில் உள்ள சந்தான விநாயகர் மற்றும் நாகநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வெளிப்பட்டணத்தில் மாடசாமி மற்றும் அய்யனார் கோயில் முன் சந்தான விநாயகர் மற்றும் நாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலைகளில் புனிதநீர் கும்பங்கள் வைக்கப்பட்டு அதற்கு சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர்.
இரண்டு கால யாக பூஜைகள் வியாழக்கிழமை அதிகாலை நடந்து முடிந்த நிலையில், காலை 7 மணிக்கு மேலாக யாகசாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கும்பங்களை சிவாச்சாரியார்கள் தலையில் ஏந்திச் சென்றனர். பின்னர் வேதபாராயணம் முழங்க சந்தான விநாயகர் மற்றும் பரிவார சுவாமி சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.