சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெறுவதற்கு பட்டதாரிகள் உள்ளிட்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
  தமிழக அரசால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் பட்டதாரிகள், பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் தொழில் தொடங்குவதற்கு (2019-20) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  நீட்ஸ் திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்க குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிக பட்சம் ரூ.5 கோடி வரையில் வங்கிக்கடன் பெற பரிந்துரைக்கப்படும்.
   தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும் நாளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு 21 வயது நிறைவடைந்திருக்க 
  வேண்டும்.
   பொதுப் பிரிவினராய் இருந்தால் அவர்களுக்கு 35 வயதிற்கு அதிகமாகாமலும், சிறப்பு பிரிவினரான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், ராணுவத்தினர், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு  45 வயதிற்கு அதிகமின்றியும் இருத்தல் அவசியம். 
  கடனுதவிக்கு விண்ணப்பிக்க வருமான வரம்பு இல்லை. 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தொடர்ந்து வசிப்பவராகவும், முதல் தலைமுறை தொழில்முனைவோராகவும் இருத்தல் வேண்டும்.
  இத்திட்டத்தில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் ரூ.25 லட்சம் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் மானியமும், வட்டி மானியமும் வழங்கப்படும். பங்குதாரர் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
  உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் பட்டியலில் ஜேசிபி, பொக்லைன்,  எல்பிஜி புல்லட் டேங்க் டிரக், கன்டெய்னருடன் கூடிய டிரக்,  சாலை சமன்படுத்தும் வாகனம், கலவை இயந்திரம், டேங்கர் டிரக், கிரேன்கள் மற்றும் போர்க் லிப்ட் கருவிகள், கான்கிரீட் மிக்சிங் கருவிகள், ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனங்கள், ரெடிமிக்ஸ் கான்கிரீட் கேரியர், இழுவை வாகனங்கள், கான்கிரீட் பைலிங் வாகனங்கள், வாயுக்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மொபைல் கேட்டரிங் சர்வீஸ் மற்றும் உணவகங்கள் ஆகிய தொழில்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
  எனவே தொழில் தொடங்க விரும்புவோர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04567-230497 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai