ராமேசுவரத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக் கோரிக்கை
By DIN | Published On : 14th June 2019 07:49 AM | Last Updated : 14th June 2019 07:49 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம் நகராட்சி 15 மற்றும் 16 ஆகிய இரண்டு வார்டு பகுதியில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்ய கெந்தமாதன பர்வம் கோயிலுக்கு செல்லும் சாலையில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இதில் இருந்து வாரத்திற்கு 4 நாள்கள் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது போதிய நீர் கிடைக்காத நிலையில் கடந்த 2 ஆண்டாக மேல்நிலைத்தொட்டி செயல்படாத நிலையில் சேதமடைந்துள்ளது.
மேலும் நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ள இடத்தின் அருகே குடியிருப்புகள் மற்றும் ராமர் பாதம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்லும் பிரதான சாலையும் அமைந்துள்ளது. இந்த தொட்டி உடைந்து விழுந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியது:
பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்களின் நலன் கருதி உடனே சேதமடைந்து நீர்த் தேக்கத் தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.