ஓரியூர் புனித அருளானந்தர் ஆலய தேர் பவனி
By DIN | Published On : 23rd June 2019 12:39 AM | Last Updated : 23rd June 2019 12:39 AM | அ+அ அ- |

திருவாடானை அருகே ஓரியூரில் புனித அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற 72 ஆம் ஆண்டு விழா தேர் பவனி நடைபெற்றது.
இங்கு ஆண்டு தோறும் ஜூன் மாதம் புனித அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற ஆண்டு விழா கொண்டாடுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் புனித அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற 72 ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை மாலை தேவகோட்டை வட்டார அதிபர் பங்கு தந்தை ஜெகநாதன் தலமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை ஓரியூர் பங்கு அருளகம் இல்லம் இயக்குநர் பங்கு தந்தை அமல்ராஜ், கற்காத்தகுடி பங்கு தந்தை மரியலூயிஸ் தேவகோட்டை தே பிரித்தோ இல்லத் தலைவர் வின்சென்ட் அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி குணமளிக்கும் வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அருளானந்தர் சொரூபம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் சிறப்பு திருப்பலி, கலைநிகழச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை ஓரியூர் பங்கு பணியாளர் ஆல்பர்ட் முத்துமாலை, ஓரியூர் புனித அருளானந்தர் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்டின் ஆகியோர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலியுடன் கொடியிறக்கம் நடைபெற்று விழா நிறைவடைந்தது.
இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.