குடிநீர் பிரச்னை: ராமநாதபுரத்தில் காலிக்குடங்களுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்காத தமிழக அரசைக் கண்டித்து திமுகவினர் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


ராமநாதபுரத்தில் குடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்காத தமிழக அரசைக் கண்டித்து திமுகவினர் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
தமிழகத்தில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னையை முன்னிறுத்தி தமிழகம் முழுதும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.இதில் திமுக மகளிர் அணியினர் காலிக்குடங்களுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 
குடிநீர் பிரச்னையைத் தீர்க்க  தமிழக அரசு முன்னுரிமை அளித்துச் செயல்படவேண்டும். ராமநாதபுரத்தில் செயல்படுத்தப்படும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்களை முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி, முன்னாள் மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.கே.பவானிராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.முருகவேல், திசைவீரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிசந்திரராமவன்னி, நகரச் செயலர் கார்மேகம், ஒன்றிய நிர்வாகிகள் கமுதி வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மனித சங்கிலி போராட்டம்: ஆர்ப்பாட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் விரைவில் தீர்வு காணாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும். மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலையில் எஸ்.பி.பட்டணம், தொண்டி, தேவிபட்டணம், மண்டபம், ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com