குழந்தைகள் உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வந்தவர்களுக்கு மிரட்டல்: சிவகங்கை தமிழாசிரியர் மீது வழக்கு
By DIN | Published On : 23rd June 2019 12:38 AM | Last Updated : 23rd June 2019 12:38 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத் தமிழாசிரியர் மீது ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையச் சிறப்பு அமர்வு கூட்டம் ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆணையத்தின் தேசிய தலைவர்,உறுப்பினர், மாநிலத் தலைவர் மற்றும் மாவட் ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை,தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 தென்மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. ஏற்கெனவே நிலுவையில் உள்ள குழந்தைகள் தொடர்பான வழக்குகள் மற்றும் மனுக்கள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டன.
ஆணையத்தில் மனு அளிக்க சிவகங்கை மாவட்டம் செல்லியம்பட்டியைச் சேர்ந்த சிலர் புகார் அளிக்க வந்திருந்தனர். அப்போது அவர்களை அதே ஊரைச் சேர்ந்த அரசு பள்ளி தமிழாசிரியர் லாரன்ஸ் எட்வர்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் காந்திமதி அளித்த புகாரின் பேரில் தமிழாசிரியர் லாரன்ஸ் எட்வர்டு மீது வழக்குப் பதியப் பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் மீது மாணவியர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டப்படி வழக்குப் பதியப் பட்டுள்ளது. இதுதொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் பாதிக்கப்பட்டோர் மனு அளிக்க வந்துள்ளனர்.
அப்போது பாதிக்கப்பட்டவர்களை ஆசிரியர் செல்லிடப்பேசியில் படம் பிடித்து மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.