தேவகோட்டை அருகே பள்ளி மாணவி தீயில் கருகி பலி
By DIN | Published On : 23rd June 2019 12:39 AM | Last Updated : 23rd June 2019 12:39 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வீட்டில் சமையல் செய்த போது ஆடையில் தீ பற்றியதில் தீயில் கருகி பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தேவகோட்டை அருகே உள்ள அடஞ்சான் வயல் கிராமத்தைச் சேர்ந்த அழகர் மகள் சினேக பிரபா(14 ). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி வீட்டில் விறகு அடுப்பில் சமைப்பதற்காக மண்ணெண்ணெய் ஊற்றி அடுப்பை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றியது. இதில் பலத்த தீக் காயமடைந்த அவரை மீட்டு, ஏம்பல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்குப் பின் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.