"குடிநீர் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் முற்றுகைப் போராட்டம்'

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க போதிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க போதிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலபாரதி கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்கவும்,  மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் தாலுகா குழு சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட செயலாளர் காசிநாததுரை தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தார். 
பின்னர் கே.பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரத்தில் கமுதி உள்ளிட்ட தாலுகாக்களில் குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால், அப்பகுதியில் தனியார் நிறுவனம் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை தமது தேவைக்கு எடுத்து வருவதை தடுக்க வேண்டும்.
 திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடிய பிறகே தமிழக அரசு குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், ராமநாதபுரம் நகரில் விலை கொடுத்தே மக்கள் தண்ணீரை வாங்கும் நிலை உள்ளது. எனவே குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி கலந்தாலோசிக்க வேண்டும். தனியார் விற்கும் குடிநீர் விலையை நிர்ணயிப்பது தொடர்பாகவும் நடவடிக்கை அவசியம். குடிநீர் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார். 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாததுரை கூறியது:  நரிப்பையூர் திட்டத்தில் மூலம் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். நிலத்தடிநீரை பாழ்படுத்தும் இறால் பண்ணைகளை உடனே அகற்றி, ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார். 
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துராமு, மயில்வாகனன், தாலுகா உறுப்பினர்கள் முத்துசாமி, மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com