பரமக்குடி பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தம்: ஓட்டுநர்கள், பயணிகள் அவதி

பரமக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனங்கள்

பரமக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை நிறுத்தி வைத்து ஆக்கிரமித்துள்ளதால் பேருந்து ஓட்டுநர்களும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
 பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அம்மா உணவகம் முன்பாக நகராட்சிக்கு சொந்தமான 11 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இக்கடைகளின் முன்பாக தேரிருவேலி, காமன்கோட்டை, மஞ்சூர், சிக்கல் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்து நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடை பகுதிகளில் வெளியூர்களுக்குச் செல்லும் சிலர் தங்களது இரு சக்கர வாகனங்களையும், கார்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். 
 இதனால் பேருந்துகளை முறையாக நிறுத்த முடியாமல் ராமநாதபுரம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் நிறுத்துவதால்  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பேருந்துகள் நிற்கும் இடங்களை  பயணிகள் கண்டுபிடித்து ஏறிச்செல்வதில் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். 
 மேலும் நகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ள கடை வாடகைதாரர்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 
பாலூட்டும் அறையில் குப்பைக் கழிவுகள்: இங்குள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையின் முன்பாக குப்பைக் கழிவுகள் கொட்டும் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் தாய்மார்கள் தொற்றுநோய் பரவும் அபாயத்தால் அப்பகுதிக்குச் செல்வதில்லை. மேலும் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் அந்த பகுதிக்கு பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர். இதனால் தாய்மார்களுக்கான அறை பயனற்ற நிலையில் உள்ளது.   
   இதே போன்று இலவச நவீன கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் அறை மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மற்ற அறைகள் பூட்டிக்கிடக்கின்றன. இதனால் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் சிரமப்படும் நிலை உள்ளது. 
 பரமக்குடி பேருந்து நிலையம் அதிகளவில் மக்கள் வந்து செல்லும் பெரிய நகரமாகும். இங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் முறையாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com