ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 கிராமங்களில் லாரிகளில் மட்டுமே குடிநீர் விநியோகம்: ஆட்சியர் தகவல்

உள்ளூர் நீராதாரமும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்பும் இல்லாத நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில்

உள்ளூர் நீராதாரமும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்பும் இல்லாத நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 45 கிராமங்களுக்கு லாரிகள் மூலம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டுவருகிறது என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் கூறினார்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் திட்டங்களை பார்வையிட பத்திரிகையாளர்கள் செவ்வாய்க்கிழமை அழைத்துச்செல்லப்பட்டனர். ஆர்.காவனூர் கிராமத்தில் குடிநீர் திட்டப் பணிகளை பார்வையிட்ட பின்னர், ஆட்சியர் கொ.வீரராகவராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  
 ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகள் உட்பட 2,306 குக்கிராமங்கள் உள்ளன. அவற்றுக்கு தினமும் 79.4  மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தினமும் 35 மில்லியன் லிட்டரும், உள்ளாட்சித் துறையின் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையம் ஆகியவற்றின் மூலம் தினமும் 38 மில்லியன் லிட்டரும் விநியோகிக்கப்படுகிறது.      மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளில் சாயல்குடி பேரூராட்சி தவிர மீதமுள்ள 6 பேரூராட்சிகளிலும் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. சாயல்குடி பேரூராட்சியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள்  குடிநீர் வழங்கப்படுகிறது.  
       ஊரகப் பகுதிகளில் 1,295 குக்கிராமங்களுக்கு தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், 788 குக்கிராமங்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாளும்,  223 கிராமங்களுக்கு 2 நாள்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்படுகிறது.  அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.13.82 கோடி மதிப்பில் 377 குடிநீர் திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
   காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் வழங்கிட இயலாத நிலையிலும் உள்ளூர் நீராதாரம்  ஏற்படுத்த இயலாத நிலையிலும் 45 கிராமங்கள் உள்ளன. அங்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் டேங்கர் லாரிகளில் தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. 
    மேலும், குடிநீர் விநியோகம் தொடர்பாக இதுவரை 82 புகார்கள் பெறப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளன. குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைமொழி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 
   ஆய்வின் போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய உதவி செயற்பொறியாளர் (காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்) டி.எம்.ஜவகர் கென்னடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


குடிநீரை விலைக்கு வாங்குகிறோம்: பெண்கள் புகார்
ஆர்.காவனூர் கிராமத்துக்குச் சென்ற ஆட்சியர், அங்கு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீர் குழாய்களை ஆய்வு செய்தார். காவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்ட ஆட்சியர், பள்ளியில் பாழடைந்த கட்டடத்தை புதுப்பிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். காவனூர் கண்மாயில் கட்டப்பட்ட மடை அமைப்பு சரியில்லை என கிராமத்தினர் கூறியதை அடுத்து அவற்றை பார்வையிட்டார்.  
 பின்னர் அவர் தெற்குத்தரவை கிராமத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நின்ற மங்களகுடியன்வலசை, பேயன்வலசை, வீரபாண்டி வலசை கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களது கிராமங்களில் குடிநீரை குடம் ரூ.12 முதல் ரூ.20 வரை விலைக்கு வாங்குவதாகவும், ஒரே ஒரு மேல்நிலைத் தொட்டியால் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான  தண்ணீரை தேக்கமுடியவில்லை என்றும் கூறினர். அதைக் கேட்ட ஆட்சியர் அங்கு கூடுதல் தண்ணீரை தேக்க புதிய தொட்டி அமைக்கவும், கிணறுகள் அமைக்கும் சாத்தியத்தை ஆராயவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில், எங்கள் பகுதியில் போதிய மின்மாற்றியில்லாததால் மின் பற்றாக்குறை உள்ளது. மேலும், தெற்குத் தரவைக்கு ராமநாதபுரம் பகுதியிலிருந்து வந்த பேருந்துகள் தற்போது இங்கு நிறுத்தப்படுவதில்லை என்று கூறினர். இதைக் கேட்ட ஆட்சியர், கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாகக் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com