உலக வன உயிரின நாள்: ராமேசுவரத்தில் வனத் துறையினர் விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி
By DIN | Published On : 04th March 2019 07:35 AM | Last Updated : 04th March 2019 07:35 AM | அ+அ அ- |

உலக வன உயிரின நாளை முன்னிட்டு, ராமேசுவரத்தில் வனத் துறையினர் சார்பில் விழிப்புணர்வு இரு சக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மார்ச் 3-ஆம் தேதி சர்வதேச வன உயிரின நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வன விலங்குகள், வனத்தில் உள்ள முக்கிய தாவரங்களைப் பாதுகாக்கவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.
இந்தாண்டு உலக வன உயிரின நாளில், "வன விலங்குகளை வேட்டையாடுவது மிகக் கொடூரம்' என்ற கருத்தை மக்களிடையே பரப்ப வனத் துறை முடிவு செய்திருந்தது.
அதனடிப்படையில், வனச் சரகர் சதீஸ் தலைமையில் வனத் துறையினர் 25 பேர், 15 இரு சக்கர வாகனங்களில் மண்டபத்திலிருந்து தனுஷ்கோடி வரை பேரணியாகச் சென்றனர்.
இதில், சுற்றுலாப் பயணிகளிடம் கடலில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்க பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், தனுஷ்கோடிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளிடம் கடல் வளம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரத்தை வழங்கினர்.