ராமநாதபுரத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
By DIN | Published On : 08th March 2019 01:44 AM | Last Updated : 08th March 2019 01:44 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை (மார்ச் 9) மாவட்ட அளவில் 12 அமர்வுகளாக மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்படவுள்ளதாக முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஏ.கயல்விழி கூறினார்.
ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. அதன்மூலம் 1,369 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
தற்போது மீண்டும் வரும் சனிக்கிழமை (மார்ச் 9) காலை 10 மணிக்கு ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை உள்ளிட்ட இடங்களில் 12 அமர்வுகள் மூலம் நிலுவையில் உள்ள 2,118 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராத நிலையில் உள்ள 3,413 வழக்குகளும் விசாரித்து தீர்வு காணப்படவுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 12 ஆயிரம் வழக்குகளில் 6 ஆயிரம் வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளவை.
அதில் 2,118 வழக்குகளே தற்போது தீர்வு காணப்படவுள்ளன. அதன்படி மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கும் மேலாகிய வழக்குகளில் ஒரு சதவிகிதம் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன.
மக்கள் நீதிமன்றத்திற்கு புதிய வழக்குகளையும் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் கொண்டு வந்து தீர்வு காணலாம். இவற்றை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
பேட்டியின் போது மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பி.ஆர்.ராமகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட நீதிபதி டி.வி.அனில்குமார், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான வி.ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.