ராமநாதபுரத்தில் மண்ணின் தன்மையால் அதிகரிக்கும் வெப்பம்: ஆய்வில் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணின் தன்மையால் கோடை வெப்பமானது அதிகம் உணரப்படுவதாக

ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணின் தன்மையால் கோடை வெப்பமானது அதிகம் உணரப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், காற்றை தொடர்ந்து கண்காணிக்க போதிய வசதிகளை ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் காற்று தொடர் கண்காணிப்பு மையம் மூலம் வெப்பத்தின் தாக்கம் கண்காணிக்கப்படுகிறது. மாநில அளவில் சென்னை, அம்பத்தூர், மணலி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கடலூர், சேலம் ஆகிய இடங்களில் மட்டுமே உள்ள இந்த மையங்கள் வாயிலாக அவ்வப்போது ராமநாதபுரம் போன்ற சில மாவட்டங்களிலும் வெப்பத்தின் தாக்கத்துக்கான  காரணம் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன. 
 ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்ணின் தன்மை கருப்பு நிறத்தில் உள்ளதால் அவை வெப்பத்தை உள் இழுக்காமல் உடனடியாக எதிரொலிப்பதால் வெப்பத் தாக்கம் அதிகமாக உணரப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 
மரங்கள் குறைந்து வாகனங்கள் அதிகரித்திருப்பது ஒரு காரணம் என்றாலும், சூரிய ஒளியை மண் உள்வாங்காமல் எதிரொலிக்கும் தன்மையே வெப்பம் அதிகமாக இருப்பது போன்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் மாசு கட்டுப்பாடு வாரிய உயர் அதிகாரிகள். 
ராமநாதபுரத்தில் வெப்பம், காற்று, நீர் ஆகியவற்றின் மாறுபாடு அங்குள்ள மக்களின் சுகாதாரத்திலும் எதிரொலிப்பது தெரியவந்துள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாசுகட்டுப்பாடு பொறியாளர் அலுவலகத்தில் தேசிய அளவிலான காற்று தொடர் கண்காணிப்பு 
மையம் மற்றும் ஆய்வகம் அமைக்கவேண்டும் என மாவட்ட மாசுகட்டுப்பாட்டு மையத்திலிருந்து,  மாநில மாசுக் கட்டுப்பாட்டு மையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என மாவட்ட மாசுகட்டுப்பாட்டு பொறியாளர் கண்ணன் தெரிவித்தார். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதலே மாசுகட்டுப்பாடு பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. மாவட்டத்தில் 365 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், 89 மருத்துவமனைகளும் அடக்கம். 
மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறாமல் ஆண்டுக்கு 10 முதல் 20 சிறிய, பெரிய தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. 
இத்தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு சீர்கேடை மட்டுமே மாவட்ட மாசுகட்டுப்பாட்டு பொறியாளர் அலுவலகம் கண்காணித்து வரும் நிலையில், மக்களுக்கான பாதிப்பை ஏற்படுத்
தும் பொதுவான காற்று, நீர் மாசுகளையும் கண்காணிக்கும் நிலை அவசியமாகியுள்ளது. 
இந்தச்சூழலில் ராமநாதபுரம் தொண்டி பகுதியில் சிப்காட் அமைய உள்ளதால், காற்று, நீர் மாசுபடுவதை தொடர்ந்து கண்காணிக்கும் அமைப்பை ஏற்படுத்துவது அவசியம் என்றும் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com