சுடச்சுட

  

  இறால் பண்ணைகளை அகற்றக் கோரி தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

  By DIN  |   Published on : 16th March 2019 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாத புரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள தாமோதிரம்பட்டிணம் பகுதியில்  இறால் பண்ணைகளை அகற்றக் கோரி திருவாடானை தாலுகா அலுவலகத்தை சிஐடியு மற்றும் கடல் தொழிலாளர் சங்கம் சார்பில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
  இதில் சிஐடியு மாவட்டச் செயலர் சிவாஜி, கிராமத் தலைவர் அய்யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். தாமோதிரம்பட்டிணம் கிராம மக்கள் ராமு, பழனிவேல், குமரவள்ளி, தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் அறிந்து வந்த திருவாடானை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ்,  திருவாடானை காவல் துறை ஆய்வாளர் மோகன் மற்றும் போலீஸார், முற்றுகைப் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
   அப்போது சிஐடியு  தொழிலாளர்களுக்கும், திருவாடானை டிஎஸ்பி புகழேந்தி கணேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
  உடனடியாக அங்கு வந்த திருவாடானை வட்டாட்சியர் சேகர், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 
  அப்போது வட்டாட்சியர் சேகர் கூறியதாவது: தாமோதரன்பட்டிணம் மீனவ கிராமத்தில் உரிய அனுமதியின்றி அமைத்துள்ள இறால் பண்ணைகளை விரைவில் அகற்றுவதற்கு 10 பேர் கொண்ட குழு அமைத்து, அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்சமயம் மக்களவை தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் முற்றுகைப் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
   இந்த முற்றுகைப் போராட்டத்தில் கடல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலர் சிவாஜி, உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் நாகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai