சுடச்சுட

  

  கமுதி அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   அபிராமம் அருகே உள்ள காட்டு எமனேஸ்வரத்தில் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு பல ஆண்டுகளாக காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. 
  அவ்வப்போது புழக்கத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீரும், சில வாரங்களாக விநியோகிக்கப்படாததால்  2 கி.மீ. தூரம் சென்று, வழிமறிச்சான் கிராமத்தில்  தனியாருக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்று நீரை சேகரித்து, பயன்படுத்தி வருகின்றனர்.
  இதுகுறித்து காட்டு எமனேஸ்வரம் கிராம மக்கள் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 ஆண்டுகளாக புகார் தெரிவித்ததன் பேரில், இங்கு 14 ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு குழாய் வசதியுடன் அமைக்கப்பட்டது. 
  இந்த ஆழ்துளை கிணற்றிலும் உவர்ப்பு நீராக இருப்பதால் புழக்கத்திற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. 
  இதனால் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, காட்டு எமனேஸ்வரம் கிராம மக்கள்,  வெள்ளிக்கிழமை கமுதியிலிருந்து அபிராமம், பார்த்திபனூர் வழியாக மதுரைக்கு செல்லும் சாலையில், காலிக் குடங்களுடன் அமர்ந்து, போராட்டம்  நடத்தினர். 
  அப்போது அவ்வழியாக வந்த பார்த்திபனூர் காவல் சார்பு ஆய்வாளர் பழனி, பொதுமக்களிடம் சமரசம் பேசினார். பின்னர் கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் உடனடியாக குடிநீர் வசதி செய்து தரக் கூறினார்.
   தகவல் அறிந்து வந்த அபிராமம் காவல் ஆய்வாளர் ஜெயராணி  மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானமாக பேசி மறியலை கைவிடச் செய்தார். இந்த மறியலால் அப்பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai