சுடச்சுட

  

  கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு: சிங்கள மொழியில்  கூட்டு வழிபாடு

  By DIN  |   Published on : 17th March 2019 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு நாளான சனிக்கிழமை நடைபெற்ற கூட்டு வழிபாட்டில் தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் கூட்டு வழிபாடு சிங்கள மொழியிலேயே நடைபெற்றது. 
   ராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவில் உள்ள  அந்தோணியார் ஆலயத் திருவிழா வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு சென்றனர். அதேபோல இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை மாலையில் கொடியேற்றம், சிலுவைப்பாதை  மற்றும் கூட்டுத்திருப்பலி ஆகியன நடைபெற்றன.
  சனிக்கிழமை காலையில் நடந்த கூட்டு வழிபாட்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கள பக்தர்கள்  கலந்து கொண்டனர். இதனால், வழிபாட்டுக்கூட்டம் சிங்கள மொழியில் நடந்தது. வழக்கமாக தமிழில் நடைபெறும்  கூட்டு வழிபாடு கடந்த 2 ஆண்டுகளாக சிங்கள மொழியில் நடப்பதாக கூறப்படுகிறது. விழாவுக்கு வந்திருந்தவர்கள் கச்சத்தீவில் விடிய, விடிய தங்கியிருந்து  வழிபாடு நடத்தினர். 
  விழாவை முன்னிட்டு கச்சத்தீவைச் சுற்றிலும் இலங்கை கடற்படையினரின் நவீன ரோந்துக்  கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அந்நாட்டு கடற்படையினர், நெடுந்தீவுப் பகுதி போலீஸார், இலங்கை  ராணுவத்தினர் என ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.  தீவு முழுவதும் இலங்கை நாட்டுக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.  விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை   தமிழகத்திலிருந்து சென்ற பக்தர்கள் படகுகளில் ராமேசுவரம் திரும்பினர். அவர்கள் இந்திய கடற்படை ரோந்து கப்பல்கள் மூலம் நடுக்கடலிலும், ராமேசுவரத்தில் சுங்கத்துறையாலும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டனர் என்பது  குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai