சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகனத் தணிக்கையில் ரூ.47.26 லட்சம் சிக்கியது

  By DIN  |   Published on : 17th March 2019 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.47.26 லட்சம் ரொக்கம் மற்றும் கைக்கடிகாரங்கள், மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கொ.வீரராகவராவ் தெரிவித்தார். 
  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:   ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 12 பறக்கும்படை குழுக்கள், 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 17,945 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. கால அவகாசத்துக்குப் பிறகும் விளம்பரங்களை அகற்றாமல் இருந்தவர்கள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் சனிக்கிழமை 15 இடங்களில் நடைபெற்ற வாகனத் தணிக்கையின் மூலம்  மொத்தம் ரூ.47 லட்சத்து 26 ஆயிரத்து 850 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் ரூ.19.09 லட்சம் இந்தியப் பணமும், ரூ.28.17 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் அடங்கும்.  மேலும் 2 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ. 7.60 லட்சம் மதிப்பிலான மடிக்கணினிகள், கைகடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.  
  இதுதொடர்பாக சுங்கத்துறை மற்றும் வருமானவரி துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்கள் மாவட்ட கருவூலத்தில் வழங்கப்பட்டுள்ளன.  
   இதற்கு உரியவர்கள், ஆவணங்களை 7 நாள்களுக்குள் சிறப்புக் குழுவினரிடம் காண்பித்து அவற்றை மீண்டும் பெறலாம். ஆவணங்கள் அளிக்காவிடில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி மற்றும் அதிகாரிகள்  உடனிருந்தனர்.   
  மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி புறவழிச்சாலையில் தேர்தல் பறக்கும்படை வட்டாட்சியர் செந்தில்வேல், போலீஸ் சார்பு ஆய்வாளர் சோமசுந்தரபாரதி ஆகியோர் சனிக்கிழமை வாகன சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரம் அருகே சுந்தரவலசை பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் கண்ணன், மதுரைக்கு காரில் சென்றார். இவரது காரை நிறுத்தி பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.
    அப்போது காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி மானாமதுரை சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai