வாக்காளர் விழிப்புணர்வு தபால் தலை வெளியீடு
By DIN | Published On : 24th March 2019 12:36 AM | Last Updated : 24th March 2019 12:36 AM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் எனது அஞ்சல் தலை என்ற பெயரில் வாக்காளர் விழிப்புணர்வு தபால் தலையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினித் கோத்தாரி சனிக்கிழமை வெளியிட்டார்.
தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அஞ்சல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் வினித் கோத்தாரி பங்கேற்று தபால் தலையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதிமன்ற தலைவர் பி.வி.ராமகிருஷ்ணன், மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி, மாவட்ட சார்பு நீதிபதி வி.ராமலிங்கம், கூடுதல் மாவட்ட நீதிபதி டி.வி.அனில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் 100 சதவீதம் தவறாமல் வாக்களிப்போம், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தும் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாதிரி வாக்குகள் பதிவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மாதிரி வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வுகளின் போது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், ராமேசுவரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், வட்டாட்சியர் சந்திரன், மற்றும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.