வீட்டில் 43 பவுன் நகை திருட்டு: ஒருவர் கைது
By DIN | Published On : 24th March 2019 12:35 AM | Last Updated : 24th March 2019 12:35 AM | அ+அ அ- |

தேவகோட்டையில் வீட்டில் திருடிய 43 பவுன் நகையை நகைக்கடையில் விற்கச் முயன்றவரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
தேவகோட்டை அண்ணா சாலை பகுதியில் வசித்து வரும் பங்குராஜ்-சுசிலா தம்பதியினர் கடந்த 2018 டிசம்பரில் கதவை திறந்துவைத்து தூங்கிய 43 பவுன் நகை திருடு போனது. இச்சம்பவம் குறித்து அவர்கள் போலீஸில் புகார் அளிக்கவில்லை.
பக்கத்து வீட்டைச் சேர்ந்த சம்புலிங்கம் (43) நகையை திருடியுள்ளார். அவர் தனது மைத்துனரான காரைக்குடியைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகன் செல்வத்திடம் (39) நகையைக் கொடுத்து விற்க சொல்லியுள்ளார். செல்வம் நகையை விற்கச் சென்றபோது சந்தேகக்தின்பேரில் நகைக்கடை உரிமையாளர் போலீஸிடம் தெரிவித்தார். இதையடுத்து நகர் காவல் ஆய்வாளர் கீதா, காவல் சார்பு ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் காவலர்கள் செல்வத்தைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு நகையை மைத்துனர் சம்புலிங்கம் கொடுத்ததாகக் கூறினார். யாருடைய நகை என்று விசாரித்ததில் பங்குராஜ்-சுசிலா தம்பதினருடைய நகை என்பது தெரியவந்தது.
போலீஸார் பங்குராஜ் வீட்டிற்குச் சென்று விசாரித்ததில் நகை தங்களுடையது தான் என்று கூறினர் நகை திருடு போனது பற்றி ஏன் போலீஸில் புகார் கொடுக்கவில்லை என்று கேட்ட போது நெருங்கிய உறவினர்கள் அன்று வீட்டில் இருந்ததால் மன வருத்தம் ஏற்படும் என்று நினைத்து போலீஸில் புகார் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். போலீஸார் செல்வத்திடமிருந்து 30 பவுன் நகையை கைப்பற்றினர். மேலும் வழக்குப்பதிவுசெய்து சம்புலிங்கத்தை தேடிவருகின்றனர்.