Enable Javscript for better performance
மின் இணைப்பு கோரி ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    மின் இணைப்பு கோரி ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

    By DIN  |   Published on : 28th March 2019 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்சார வசதி  கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை பெண்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் கீழநாகாச்சி கிராமப் பகுதியைச் சேர்ந்தது கல்கிணற்றுவலசை பகுதி. இங்கு சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மின்சார வசதி செய்துதரப்படவில்லை.  புறம்போக்கு நிலத்தில் பட்டா இன்றி வீடு கட்டியிருப்பதால் மின்சார வசதி தரப்படவில்லை என அதிகாரிகள் கூறிவந்துள்ளனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சித் தலைவராக இருந்தவர் சிறப்பு தீர்மானம் மூலம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மின்சார இணைப்பு தந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் வீட்டு வரி ரசீது பெற்று மின்சார இணைப்பு பெற்ற நிலையில், மீதமுள்ளவர்கள் வீட்டு வரி செலுத்தத் தயாராக இருந்த போதும், ஊராட்சியில் பணிபுரியும் ஒருவர் சுய நலனுக்காக வரியை வசூலிக்க மறுத்து ரசீதும் தரவில்லை எனக் கூறப்படுகிறது. 
     மின்சார வசதியின்மை மற்றும் ஊராட்சி முன்னாள் தலைவர், ஊராட்சி மன்ற பணியாளரால் வஞ்சிக்கப்படுவது குறித்து கல்கிணற்றுவலசை பகுதியைச் சேர்ந்த பெண்கள் அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தனர். 
    ஆனாலும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து வியாழக்கிழமை காலை குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த ஏராளமான பெண்கள் தங்களுக்கு மின்சார வசதி தேவை என கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 
    தேர்தல் பணியில் ஆட்சியர் இருப்பதால், மனு பெறமுடியாத நிலை உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பெண்கள் தங்களது கோரிக்கையை ஆட்சியரிடம் மனுவாக அளிப்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் போலீஸார் வந்து பெண்களை சமரசப்படுத்தி வெளியேற்றனர். அப்போது, தங்களுக்கு மின்சார வசதி செய்துதராவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும், பிரசாரத்துக்கு வரும் அரசியல் கட்சியினரை தெருவுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்றும்  அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai