அதிமுக அரசுக்கு அரணாக இருக்கும் மோடி மீனவர்களை காக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
By DIN | Published On : 30th March 2019 07:36 AM | Last Updated : 30th March 2019 07:36 AM | அ+அ அ- |

அதிமுகவுக்கு அரணாக இருப்பதாகக் கூறும் பிரதமர் நரேந்திர மோடி, மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணாதது ஏன் என, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கா. நவாஸ் கனி, பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர் ச. சம்பத் ஆகியோரை ஆதரித்து, ராமநாதபுரம் சுற்றுச்சாலை அருகே வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்தியில் ஆட்சியிலிருக்கும் பிரதமரும், தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் முதல்வரும் தங்களது சாதனைகளைக் கூறி வாக்கு கேட்கவில்லை. ஆனால், திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டே நாங்கள் வாக்கு கேட்டு வருகிறோம்.
தமிழக மீனவர்கள் இலங்கை அரசாலும், குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் அரசாலும் கைது செய்யப்படுவது தொடர்கிறது. எனவே, இரு மாநில மீனவர்களையும் இணைத்து கூட்டமைப்பு உருவாக்கி, பிரச்னைக்கு நிரந்தரமாகத் தீர்வு காணப்படும் என கடந்த தேர்தலின்போது மோடி கூறினார். ஆனால், இதுவரை தீர்வு காணவில்லை.
மேலும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கமாட்டார்கள் என பிரதமர் உறுதியளித்தார். ஆனால், அவர் கூறிய பிறகே தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்குவதும், கைது செய்வதும், படகுகளை சிறைப்பிடித்துச் செல்வதும் தொடர்கின்றன.
நாட்டின் காவலர் என தன்னைக் கூறிக்கொள்ளும் பிரதமரால், பெரு நிறுவனங்களே பயனடைந்து வருகின்றன. பிரதமர் மோடி தமிழக அரசை கடந்த 2 ஆண்டுகளாகக் காக்கும் அரணாகச் செயல்படுவதாகவும், அதனால் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாகவும் அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார். தமிழக அரசை காப்பாற்றும் பிரதமர் மீனவர்களை ஏன் காப்பாற்றவில்லை.
கொடநாடு விவகாரத்தை நான் பேசக்கூடாது என தமிழக முதல்வர் நீதிமன்றம் சென்றுள்ளார். ஆனால், ஆதாரத்துடனேயே பேசி வருகிறேன். அதற்காக நீதிமன்றத்துக்குச் செல்லவும் தயங்கமாட்டேன் என்றார்.
கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சுப. தங்கவேலன், பொன். முத்துராமலிங்கம், வி. சத்தியமூர்த்தி, பி. ரகுபதி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, முன்னாள் மக்களவை உறுப்பினர் பவானி ராஜேந்திரன், பார்வர்டு பிளாக் கட்சி பி.வி. கதிரவன், ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்டாலினுக்கு சிறுமி அளித்த
தேர்தல் நிதி: ராமநாதபுரத்தில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தின்போது, மேடையில் மு.க. ஸ்டாலினுக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் வீரவாள் மற்றும் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரின் மகளான பள்ளி மாணவி ஜாஸ்மின் ரூ.1300 இருந்த தனது சேமிப்பு உண்டியலை மு.க. ஸ்டாலினிடம் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...