முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சிக்கல் பகுதிக்கு குடிநீர் கோரி கிராம மக்கள் மனு
By DIN | Published On : 15th May 2019 07:39 AM | Last Updated : 15th May 2019 07:39 AM | அ+அ அ- |

கடலாடி தாலுகா சிக்கல் பகுதியைச் சேர்ந்த மகளிர் மன்றம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தங்கள் பகுதிக்கு குடிநீர் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மனு விவரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சிக்கல் கிராமத்தில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இக்கிராமத்தில் அமைந்துள்ள காவிரி நீர் ஏற்று நிலையத்திலிருந்து ஏர்வாடி மேலச்சிறுபோது, கீழச்சிறுபோது, காமாட்சிபுரம், ஆயகுடி உள்ளிட்ட 52 ஊர்களுக்கு தண்ணீர் செல்கிறது. பரமக்குடியிலிருந்து கடலாடி, முதுகுளத்தூர் வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி வருவதால் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு சிக்கல் கிராமத்திற்கு முழுமையாக தண்ணீர் வந்து சேருவதில்லை. எனவே அருகில் இருக்கும் கீழக்கரையிலிருந்து, ஏர்வாடி வழியாக சிக்கல் நீரேற்றும் நிலையத்திற்கு தண்ணீர் வழங்கினால் இப்பகுதியில் தண்ணீர் பிரச்னையை ஓரளவுக்கு தீர்க்க முடியும். எனவே மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து சிக்கல் பகுதி மக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனர்.