முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
திருவாடானை பகுதியில் கால்வாய்களை தூர்வாரக் கோரிக்கை
By DIN | Published On : 15th May 2019 07:43 AM | Last Updated : 15th May 2019 07:43 AM | அ+அ அ- |

திருவாடானை பகுதியில் கோடை காலம் முடியும் முன்பே வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் மாவட்டத்திலேயே அதிக அளவாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் சுமார் 200க்கும் அதிகமான பெரிய பாசன கண்மாய்களும், 500-க்கும் அதிகமான சிறுபாசன கண்மாய்களும் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்க ஏதுவாக ஒவ்வொரு கண்மாய்க்கும் இடையில் வரத்துக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வரத்து கால்வாய்கள் அனைத்து கண்மாய்களையும் இணைக்கும் ஒரு சங்கிலித் தொடர் போல் உள்ளன. இதனிடையே அரசு அவ்வப்போது கண்மாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் வரத்து கால்வாய்களை பொருத்தமட்டில் அதை தூர்வார நிதி ஒதுக்குவது கிடையாது. பல வரத்து கால்வாய்களில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கின்றன.
இதனால் மழை பெய்தாலும் இந்த கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் கண்மாய்களில் நீர் பெருகுவது இல்லை. எனவே விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: இப்பகுதியில் கண்மாய்களுக்கு செல்லும் வரத்துக் கால்வாய்கள் பல ஊர்களில் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மேலும் சீமைக் கருவேல மரங்கள் தண்ணீர் செல்லும் வழியை மறித்து புதர் மண்டிக் கிடக்கின்றன. அத்துடன் இந்த வரத்து கால்வாய்களில் சிலர் மணலை அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஆங்காங்கே மேடு பள்ளமாக உள்ளது. எனவே அரசு வரத்து கால்வாய்களின் பழைய வரைபடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதற்காக சிறப்பு நிதி ஒதுக்கி தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.