கமுதி பகுதிகளில் மணல் திருட்டுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள்: விவசாயிகள் புகார்
By DIN | Published On : 15th May 2019 07:45 AM | Last Updated : 15th May 2019 07:45 AM | அ+அ அ- |

கமுதி பகுதிகளில் வீடு கட்டி வரும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரில் சிலர் மாட்டு வண்டி மற்றும் சரக்கு வாகனங்களில் பாதுகாப்புடன் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கமுதி பகுதியில் மணல் குவாரிகள் இல்லாததால், கட்டுமானப் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு சார்பில் கட்டப்படும் கழிப்பறைகள், பசுமை வீடுகள், பாரத பிரதம மந்திரி திட்ட வீடுகள் பெரும்பாலானவை பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கமுதி மற்றும் சுற்றி வட்டாரங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தாங்கள் கட்டும் வீடுகளுக்கு மாட்டு வண்டி, சரக்கு வாகன உரிமையாளர்களிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்து மிரட்டி, மணல் திருட்டுக்கு துணையாக இருந்து வருகின்றனர். மேலும், திருட்டு மணல் அள்ளிச் செல்லும் வாகனங்களுக்கு அதிகாரிகளே வீடு வரை பாதுகாப்பு கொடுத்து வருவதாகவும், விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால், கல்லுப்பட்டி, நாராயணபுரம், வலையபூக்குளம், புதுக்குளம், மண்டலமாணிக்கம், காக்குடி, புத்துருத்தி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்றுவிட்டதாகவும், குடிநீர், விவசாயத்துக்காக குண்டாற்றில் அமைக்கப்பட்ட உறை கிணறுகள் தண்ணீரின்றி வறண்டு விட்டதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, குண்டாற்றில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மணல் திருட்டில் ஈடுபட்டு வருபவரை தடுப்பதற்காக இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.
இது குறித்து கல்லுப்பட்டி, நாராயணபுரம் விவசாயிகள் கூறியது: குண்டாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றனர்.
இது குறித்து கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் கூறியது: இதுவரை மணல் திருட்டு குறித்து எந்த புகாரும் வரவில்லை. இருப்பினும், இரவு நேரங்களில் ரோந்து பணியை முடுக்கிவிட்டு மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.