ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
      இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது. அதையடுத்து, தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, 3 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
     இந்நிலையில், மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சியின்போது, மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கொ.வீரராகவ ராவ் கூறியது: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது, 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தனித்தனியே 6 பிரிவுகளாக, அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கண்காணிப்பில் நடைபெறும்.  அதேபோல், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கண்காணிப்பில் நடைபெறும்.
       வாக்கு எண்ணிக்கையின்போது, முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு,  தொடர்ச்சியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் 42 பேர் பணியில் ஈடுபடுவர். 
     வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முடிந்துள்ள நிலையில், மே 17 மற்றும் 20 ஆம் தேதிகளில் என மொத்தம் 3 கட்டமாக பயிற்சிகள் நடக்கவுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது, அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு வரப்படும்.
     அலுவலர்கள், வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்படும் பெட்டியில் உள்ள முத்திரையை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் உறுதி செய்ய வேண்டும். அதேபோல், வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசை எண் விவரத்தினையும் படிவம் 17-னுடன் ஒப்பிட்டு உறுதி செய்யவேண்டும்.  
     அதன் பின்னரே, சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள், வேட்பாளர்கள் வாரியாக பெற்ற வாக்குகள் ஆகியவற்றை உரிய படிவத்தில் பிழையில்லாமல் பூர்த்தி செய்து, ஒவ்வொரு சுற்றாக சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கவேண்டும். 
     மேலும், வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லிடப்பேசி உள்ளிட்ட எந்தவிதமான மின்னணு சாதனங்களும் கொண்டு வருவதற்கு அனுமதியில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com