திறனாய்வுத் திட்ட இருப்பிட பயிற்சி முகாம் நிறைவு விழா
By DIN | Published On : 16th May 2019 07:06 AM | Last Updated : 16th May 2019 07:06 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் நடந்த உலக திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாம் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் மாவட்ட விளையாட்டு ஆணையம் சார்பில், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு உலகத் திறனாய்வு திட்டத்தில் இருப்பிட பயிற்சி விளையாட்டு முகாம் நடைபெற்றது. கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கிய இம்முகாமில், ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்த விளையாட்டு முகாமில், 60 மாணவர்கள், 41 மாணவிகள் என 101 பேர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு, தடகளம், கால்பந்து, ஹாக்கி, ஜூடோ, கூடைப்பந்து, வாலிபால், இறகுப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் சிறந்து விளங்கிய 48 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, சென்னை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறப்புப் பயிற்சி மையங்களில் 15 நாள்கள் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படவுள்ளன.
முகாம் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி தலைமை வகித்தார். முன்னதாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். பயிற்சியில் சிறந்து விளங்கிய 48 மாணவ, மாணவியருக்கான சான்றுகள் வழங்கப்பட்டு, பரிசுகளும் அளிக்கப்பட்டன. மாவட்ட ஹாக்கி பயிற்சியாளர் தினேஷ் நன்றி கூறினார்.