ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தை பன்றி வளர்ப்போர் முற்றுகை
By DIN | Published On : 16th May 2019 07:05 AM | Last Updated : 16th May 2019 07:05 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் பன்றி வளர்ப்போர் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகராட்சியில் சுகாதாரத்துறையினர் கடந்த சில நாள்களாக சாலைகளில் திரியும் பன்றிகள், ஆடு, மாடுகளை கொட்டடியில் அடைக்குமாறும், இல்லாவிடில் நகராட்சியே பிடித்து அப்புறப்படுத்தும் என்றும் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இவ்வாறு எச்சரித்தும் சாலைகளில் திரியும் பன்றி உள்ளிட்டவற்றை அதன் உரிமையாளர்கள் கொட்டடியில் அடைக்காத நிலையில், அவற்றை நகராட்சி ஊழியர்களே பிடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். நகரில் காட்டூரணி, எம்.ஜி.ஆர்.நகர், கே.கே.நகர், அல்லிகுண்டு கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் 40 பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளன.
மதுரை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து பன்றி பிடிப்போரை வரவழைத்து நகராட்சி சுகாதாரப் பிரிவினர் பன்றிகளை பிடித்து வருகின்றனர். இந்த நிலையில், புதன்கிழமை காலையில் சூரன்கோட்டை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில், சுகாதாரப் பிரிவு ஊழியர்கள் உள்ளிட்டோர் 20 பன்றிகளை பிடித்து வாகனத்தில் ஏற்றினர்.
பன்றிகள் பிடிபட்டதை அறிந்த அதன் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் திரண்டு வந்து தங்களது பன்றிகளை விடுவிக்குமாறு கூறி நகராட்சி அலுவலர்கள், சுகாதாரப் பிரிவு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பன்றி பிடிக்க வந்தவர்களை சிலர் தாக்கியதாகக் கூ றப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பிடிபட்ட பன்றிகளை சிலர் விடுவித்து சென்றனர். இதனால், நகராட்சி சுகாதாரப் பிரிவினர் நகராட்சி ஆணையர் சுப்பையனிடம் புகார் அளித்தனர்.
இந்தநிலையில், பன்றி வளர்ப்போர் ஏராளமானோர் நகராட்சி அலுவலக வளாகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். பன்றிகளை பிடிக்கும் நகராட்சியினர் அதை வெளியில் விலைக்கு விற்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து முற்றுகையிட்டவர்களின் பிரதிநிதிகளாக ராமமூர்த்தி உள்ளிட்டோரை நகராட்சி ஆணையர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பன்றிகளால் தொற்றுநோய் பரவுவதாக கூறிய நகராட்சி ஆணையர் சுப்பையன், தங்களது சொந்த இடத்தில் கொட்டடி அமைத்து பன்றிகளை வளர்க்கவேண்டும் என்றார். மேலும், பன்றி பிடிப்பதைத் தடுத்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று எச்சரித்தார்.
அப்போது, பன்றி வளர்ப்போர், தங்களுக்கு பன்றி வளர்ப்பதைத் தவிர வேறு தொழில் தெரியாது என்றும், ஆகவே பன்றிகளை பிடித்தால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என ஆவேசமாக கூறினர்.
பன்றியை நகர சாலையில் விட்டால் பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்த ஆணையர், நகராட்சி ஊழியர்களை தடுப்போர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்று கூறியதுடன், பன்றி வளர்ப்போர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து எழுதித்தரவேண்டும் என்றார். அதை ஏற்று பன்றி வளர்ப்போர் கலைந்து சென்றனர்.