கமுதி அருகே 4 நாள்களாக மின்சாரம் இன்றி 10 கிராம மக்கள் தவிப்பு
By DIN | Published On : 18th May 2019 07:27 AM | Last Updated : 18th May 2019 07:27 AM | அ+அ அ- |

கமுதி பகுதியில் சில நாள்களுக்கு முன் வீசிய சூறாவளி காற்றால் சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வால், 4 நாள்களாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
கமுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் 4 நாள்களுக்கு முன்பு, சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி, கீழராமநதியில் 13 ஆடுகள், ராமசாமிபட்டியில் 7 வீடுகள், கிளாமரத்தில் பல ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தன.
இந்நிலையில் பலத்த சூறாவளி வீசியதில், மேலராமநதி, பாப்பாங்குளம், முதல்நாடு, கூடக்குளம், நகர் புளியங்குளம், ராமசாமிபட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் வயர்கள் துண்டிக்கப்பட்டும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதமடைந்தன.
இதனால் 4 நாள்களாக இந்த கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கியுள்ளன. இதையடுத்து மின் இணைப்பை சீரமைத்து, மின்சாரம் வழங்கக் கோரி, மேலராமநதி கிராம மக்கள் கமுதி மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
ஆனால் நடவடிக்கை இல்லாததால், போராட்டம் நடத்தப் போவதாக மின் இணைப்பு கிடைக்காத கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கமுதி மின்வாரிய அலுவலர் ஒருவர் கூறியது: சேதமடைந்து, கீழே சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
பணியாளர்கள் பற்றாக்குறையால் விரைந்து மின்இணைப்பை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.