கமுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளால் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 18th May 2019 07:26 AM | Last Updated : 18th May 2019 07:26 AM | அ+அ அ- |

கமுதி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர் பதாகைகள் வைக்க
அனுமதி வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வரி செலுத்தி அனுமதி பெற்ற பிறகு இரண்டரை அடி உயரம், 6 அடி அகலத்தில் பதாகைகள் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் கமுதி பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகளில் முறையான அனுமதி பெறாமல் பதாகைகள் வைக்கப்பட்டு, சாலையோரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரியிழப்பு ஏற்படுவதுடன், அரசின் உத்தரவு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
இதனால் குறுகலான கமுதி பேருந்து நிலையம், கடைவீதி பகுதிகளில் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கமுதியில் அனுமதியின்றி
வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.