கமுதியை அடுத்த முஷ்டக்குறிச்சியில் வீடுகளுக்கு அருகே சேதமடைந்து, சாய்ந்து விழும் நிலையிலுள்ள மின்கம்பங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கமுதி அருகே முஷ்டக்குறிச்சி பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடுகளுக்கு செல்லும் வழியில், 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. இவை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து காணப்படுகின்றன. இவற்றில் கீழே சாய்ந்து விழும் நிலையில் 4 மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன.
இதனால் மழைக் காலங்களில் இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அருகிலுள்ள வீடுகளில் தஞ்சமடையும் அவலம் உள்ளது. மேலும் சேதமடைந்துள்ள மின்கம்பங்களால், மின் கம்பிகள், தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது. இது குறித்து கமுதி மின்வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்று கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.